தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவை வென்ற 95 வயது மூதாட்டி! - கரோனா வைரசிலிருந்து குணமடைந்த மூதாட்டி

திண்டுக்கல்: கரோனா பாதிப்பிலிருந்து 95 வயது மூதாட்டி மீண்டுள்ள சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

95 years old Lady Recovered from Corona in Dindigul
95 years old Lady Recovered from Corona in Dindigul

By

Published : May 1, 2020, 2:51 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 80 பேர் கண்டறியப்பட்டனர். இதில் திண்டுக்கல், பழனி, நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 76 பேர் ஆவர்.

அதேபோல் ராஜஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த 95 வயது மூதாட்டிக்கு கடந்த 18ஆம் தேதி கரோனா தொற்று கண்டறியப்பட்டது. டெல்லி சென்று திரும்பிய நபருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர் வீட்டினருகே வசிக்கும் மூதாட்டியின் குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து குடும்பத்தில் யாருக்கும் தொற்று இல்லாத நிலையில், மூதாட்டிக்கு மட்டும் தொற்று இருந்தது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மூதாட்டி மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதன்மூலம் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மீதமுள்ள 7 பேர் கரூர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனாவை வென்ற 95 வயது மூதாட்டி
இந்நிலையில் கரோனாவிலிருந்து மீண்டுவந்த மூதாட்டி தனது அனுபவத்தைக் கூறுகையில், 'கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கால் முறிவின் காரணமாக என்னால் நடக்க முடியாது. கண்களில் குறைபாடும் இருந்தது. அதனால் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதும் பயம் ஏற்பட்டது.
பின்னர் சிகிச்சையிலிருந்த காலத்தில் மருத்துவர்கள், செவிலியர் அனைவரும் சிறந்த முறையில் கவனித்தனர். உண்மையில் தைரியமாக இருந்தால் எந்த வயதினரும் கரோனாவை எதிர்கொள்ளலாம்.
தேவையற்ற அச்சங்களை விடுத்து உறுதியாக இருந்ததால் தற்போது எனது கொள்ளுப்பேரன் பேத்திகளை மறுபடியும் பார்த்துள்ளேன்'' என்று தெரிவித்தார்.
கரோனா பாதிப்பிலிருந்து 95 வயது மூதாட்டி மீண்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details