சாக்லெட் என்ற சொல்லை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும் காலம் இது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ருசித்துச் சாப்பிடுவார்கள். ஆனால், இந்த சாக்லெட் வரவு, கடலை மிட்டாய், தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், குச்சி மிட்டாய், ஜவ்வு மிட்டாய், கமர்கட் போன்ற பல வகையான இனிப்பு வகைகள் காணாமல் போனதுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக, 80,90 வருடங்களில் பிறந்தவர்களிடம் நீங்கா இடம் பெற்றது பம்பாய் மிட்டாய் என்று சொல்லப்படும் ஜவ்வு மிட்டாய்.
இதை கிராமங்களில் பொம்மை மிட்டாய் என்பார்கள். ஒரு நீண்ட மூங்கில் தடியில், ஒரு அழகான பொம்மையை பொருத்தி, அதன் கீழ் பகுதியில் இந்த மிட்டாயை மொத்தமாக சுற்றி வைத்து, தோளில் சாய்த்து சுமந்தபடி வீதியில் நடந்து விற்பனை செய்வார்கள்.
வெள்ளையும், ரோஸ் நிறமும் கலந்த இந்த மிட்டாயை பார்க்கும் போதே, குழந்தைகள் வாயடைத்துப் போவார்கள். இதுமட்டுமின்றி, மிட்டாய்க்காரர்கள் அந்த மிட்டாய் மூலம் பொம்மைகள் செய்யும் அழகே தனி சிறப்பு ஆகும்.
2k கிட்ஸ்களும் ஆர்வமாக வாங்கும் ஜவ்வு மிட்டாய் மயில், புறா, கிளி, என, பறவைகள் உருவங்களையும், கடிகாரம், மோதிரம், நெக்லஸ் போன்ற ஆபரணங்களையும் கலை நயத்துடன் செய்து, குழந்தைகளுக்கு அணிவித்து விடுவார்கள்.
எங்கு திருவிழா நடந்தாலும் பொம்மை மிட்டாய்காரர்களை பார்க்க முடியும். இவர்களை சுற்றி குழந்தைகள் கூட்டம் நிச்சயம் நிற்கும். ஆனால் இன்றைக்கு இந்த மிட்டாய்காரர்கள் பார்க்க முடிவதில்லை.
இந்தக் குறையை திண்டுக்கல் மக்களுக்கு இல்லாமல் பார்த்து கொள்கிறார் தேனியை சேர்ந்த ஜவ்வு மிட்டாய் விற்பனையாளர் மணிகண்டன்.
திண்டுக்கல்லுக்கு வந்துவிட்டார் ஜவ்வு மிட்டாய் தாத்தா இவர் தேனியிலிருந்து தினந்தோறும் திண்டுக்கல்லுக்கு சென்று, முக்கிய பகுதிகளில் விற்பனை செய்கிறார். இதில் அவருக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வியாபாரம் நடக்கிறதாம். இதில் பேருந்து கட்டணம், சாப்பாடு செலவு போக குறைந்த அளவே பணம் கிடைத்தாலும், மிட்டாய் வாங்கும் போது சிறுவர்களிடம் காணும் மகிழ்ச்சியே பெரியதாக உள்ளதாக தெரிவிக்கிறார்.
80ஸ்,90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட்டாக ஜவ்வு மிட்டாய் இருந்தாலும், இன்றைய 2k கிட்ஸ்களும் ஆர்வமாக அதை வாங்கி தேவையான வடிவதை செய்து தருமாறு கேட்கின்றனர்.