தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்திமுனையில் ரூ.18 லட்சம், 43 சவரன் நகை கொள்ளை - கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி?

வேடசந்தூர் அருகே வீட்டிலிருந்த சிறுவர்களிடம் கத்திமுனையில், 43 பவுன் நகை, ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்த பெண் உட்பட 8 பேர் கொண்ட முகமூடி கொள்ளையர்களை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர். இதில், கைதான பெண் வைத்திருந்த போலி பத்திரிகையாளர் அடையாள அட்டை மற்றும் மனித உரிமைகள் கழக அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 9, 2023, 10:33 PM IST

கத்திமுனையில் ரூ.18 லட்சம், 43 சவரன் நகை கொள்ளை - கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி?

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால் ரோட்டை சேர்ந்த சீனிவாசன்(40) ரியல் எஸ்டேட் அதிபரான இவர் தனது மனைவி கலையரசி, மகன் ராமச்சந்திரன், மகள் தனுஸ்ரீ ஆகியருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி இரவு சீனிவாசன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, திடீரென வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டிலிருந்த சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் வைத்திருந்த 5 பீரோக்களை உடைத்து, அதிலிருந்த 43 சவரன் நகைகள் மற்றும் ரூ.18 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடசந்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பிக்கள் துர்காதேவி, கோகுல கிருஷ்ணன், முருகேசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருச்சி மாவட்ட எல்லையான தங்கம்மாபட்டி சோதனை சாவடியில் வேகமாக வந்த இனோவா காரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், வேடசந்தூர் சாலையூர் நால்ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்தி முனையில் நகை பணத்தை கொள்ளையடித்ததும், அடுத்ததாக வாணியம்பாடி பகுதியில் ரூ.5 கோடி ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சீனிவாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிதாக இடம் வாங்குவதற்காக பூந்தமல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் தீனதயாளன் என்பவரிடம் ரூ.4 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார். தீனதயாளன் சர்வதேச மனித உரிமைகள் கழக மதுரை மண்டல பொது செயலாளராக உள்ளார். இவரது தோழி, மதுரை உத்தப்ப நாயக்கனூரைச் சேர்ந்த ஜோதி.

சீனிவாசன் வீட்டில் அதிகமான பணம் மற்றும் நகைகள் உள்ளதை தீனதயாளன் மூலம் தெரிந்துகொண்ட ஜோதி, தனது நண்பரான சென்னையில் போலீசாக வேலை பார்த்து பணிநீக்கம் செய்யப்பட்ட செல்வக்குமார் என்பவருடன் சேர்ந்து, சேலம், நாமக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் அடங்கிய கூலிப்படையை அமைத்து சீனிவாசன் வீட்டிலிருந்து நகை மற்றும் பணத்தை கத்தி முனையில் கொள்ளையடித்துள்ளனர்.

இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செல்வகுமார், ஜோதி, தீனதயாளன், சிராஜுதீன், சதீஷ், சுரேஷ், ரகு, பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணம், 21 சவரன் தங்க நகைகள், ஒரு கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஜோதி என்பவர் போலி பத்திரிகையாளர் அடையாள அட்டை மற்றும் மனித உரிமைகள் கழக அட்டையும் வைத்துள்ளது தெரியவந்தது. மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மேலும் 8 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: Fisherman protest: கலெக்டர் உத்தரவை மீறி தாக்குதல்.. மீனவர்களை கைது செய்யக்கோரி மறியல்

ABOUT THE AUTHOR

...view details