திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை தொட்டய கவுண்டனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி(43) என்ற விவசாயி. இவருக்கு வடிவுக்கரசி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். பெரியசாமி விவசாயத்துடன் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று மாலை இவரது மனைவி வடிவுக்கரசி மாடுகளுக்கு கால்நடை தீவனம் கலந்த நீரை தொட்டியில் குடிக்க வைத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் 5 மாடுகளும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து அசைவற்று கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த வடிவக்கரசி இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
வடமதுரை கால்நடை உதவி மருத்துவர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மாடுகளுக்கு சிகிச்சையளித்தார். ஆனால் அதற்குள் 5 பசு மாடுகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.