திண்டுக்கல்:வத்தலக்குண்டு அருகேதோல் தொழிற்சாலையில் சுத்திகரிப்புத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இரண்டு வட மாநில இளைஞர் உட்பட மூன்று பேர் விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சாலையில் உள்ள குட்டியபட்டி, பொண்ணுமாந்துறை, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் அன்றாடம் வேலை செய்து வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர். இதனிடையே, அங்குள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் வட இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சேலத்தில் உச்சத்தை தொட்ட காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் - பொதுக்கூட்டம் நிறுத்தப்பட்டதால் நிர்வாகிகள் வேதனை!
இந்த நிலையில், பொண்ணுமாந்துறை பகுதியில் இயங்கி வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று (ஜூலை 25) பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதற்கிடையே அங்குள்ள தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த ஹாசன், சுமன் ஹிம்ராம் ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அம்மோனியம் சல்பேட் எனும் விஷவாயு தாக்கியது. இதனால், சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் மயக்கம் அடைந்தனர்.