திண்டுக்கல் ஜல்லிக்கட்டு போட்டி திண்டுக்கல்:சாணார்பட்டி அருகே தவசிமடையில் புனித அந்தோனியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (பிப். 19) நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.
கால்நடைகளை உதவி இயக்குநர் திருவள்ளுவன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் ஸ்ரீதர், ஸ்ரீமதி ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் 482 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கினர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவர்கள் அசோக்குமார், ஆனந்த பிரபு, திலீப் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மாடுபிடி வீரர்கள் 140 பேரை பரிசோதனை செய்து காளைகள் பிடிக்க அனுமதித்தனர்.
இதையடுத்து காலை 8.10 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் பிரேம்குமார் தொடங்கி வைத்தார். இதில் கிழக்கு தாசில்தார் சந்தன மேரி கீதா, மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பானை, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 21 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமையில் மருத்துவர்கள்
சிகிச்சையளித்தனர்.
இதில், படுகாயமடைந்த ராஜேஸ் (21), ஜோசப் (80), ஆரோக்கியசாமி (38), மதனகோபால் (36), கோகுல் (21), அந்தோணி (50), அரவிந்த் (16) ஆகிய 7 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், 250 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க:குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவிக்கு ஆட்சியர் கொடுத்த சர்ப்ரைஸ்!