திண்டுக்கல்:அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், தாய்மார்கள் பெரும்பாலானோர் மின் இழுவை ரயில், ரோப் கார் சேவையை பயன்படுத்தியே மலை கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
இதற்காக 3 மின் இழுவை ரயில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு ரயிலுக்கு 36 பேர் வீதம் பக்தர்கள் மலைக் கோயிலுக்கு செல்ல முடியும். இந்நிலையில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் பக்தர்களின் நலன் கருதி தனது சொந்த செலவில் 72 பேர் பயணிக்க கூடிய ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பெட்டியை கடந்த ஜனவரி மாதம் வாங்கிக் கொடுத்தார்.
இதனை உரிய நேரத்தில் தண்டவாளத்தில் பொருத்தாமல் கடந்த 8 மாதங்களாக அலைக்கழித்து வருவதாகவும் இதனால் கோயில் நிர்வாகத்திற்கு 2 கோடி ருபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி பக்தர் பேரவை செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன, இந்நிலையில் 3 மின் இழுவை ரயில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 2 மின் இழுவை ரயில் சேவைகள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். காரணம் கோயில் அறங்காவலர் 72 பேர் பயணிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் புதிய ரயில் பெட்டியை வாங்கிக் கொடுத்தார்.
இதனை 3 தண்டவாளத்தில் இணைத்து இன்ஜினில் உள்ள கியர் பாக்ஸ், சாப்டுகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டு புதிய சாப்ட்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. முதலில் வாங்கிய சாப்டுகள் அதனுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்காமலும், சீக்கீரமாக தேய்மானம் அடைந்ததாகவும், மீண்டும் புதிய சாப்டுகள் வாங்கப்பட்டு பொருத்தப்பட்டது. இதனையடுத்து ரயில் பெட்டிகளில் அரிசி மூட்டைகள், மளிகை பொருட்கள் வைத்து சோதனை செய்யப்பட்டு அது தேல்வியில் முடிந்துவிட்டது. இதனை சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து விட்டு, தரம் சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் கூறுகிறார்கள்.
தற்போதைய சூழலுலை பொறுத்தவரையில் 72 பேர் கொண்ட ரயிலை இயக்குவதற்கான மெக்கானிசம் இல்லை என்று தெரிகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் கார்த்திகை ,மார்கழி ,தை மாதம் போன்ற பக்தர்கள் சீசன் வர உள்ளது. எனவே அறங்காவலர் வாங்கி கொடுத்த பெட்டியைதான் பொறுத்த வேண்டும் என்கிற கோயில் நிர்வாகத்தின் பிடிவாதத்தை விட்டு பழைய முறையில் இயக்கப்பட்டு வந்த 3வது பெட்டியை மீண்டும் பொருத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பழனியில் பக்தர் - பாதுகாவலர் மோதல் விவகாரம்; நான்கு பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம்!