நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்தி, அரசு துரிதகதியில் செயல்பட்டு சிகிச்சை அளித்துவரும் நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், மொத்தம் 112 பேருக்கு முன்னதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இவர்களில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில், நேற்று மட்டும் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்து, இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 96ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஒருவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 15 பேர் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சுகாதாரத் துறை குழுக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: ஒட்டன்சத்திரம் சந்தையில் எஸ்.பி. ஆய்வு!