தர்மபுரி:பாலக்கோடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மணி. இவரும், அதேபகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர், அவரை கண்டித்து காரிமங்கலம் அருகே உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர் வீட்டில் தங்கியிருந்த பள்ளி மாணவி, ஜூன் 13ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகளை மணி என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் அளித்தனர்.
மாணவி மீட்பு
இதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காரிமங்கலம் காவல் துறையினர், மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், வெள்ளிச்சந்தை பகுதியிலிருந்த மாணவியை காவல் துறையினர் மீட்டனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் மணிக்கும், தனக்கும் திருமணம் நடந்துவிட்டதாக தெரிவித்தார்.
போக்சோவில் கைது
இதனையடுத்து, 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக காதலன் மணி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் தம்பி பச்சையப்பன், நண்பர்கள் அருள்மணி, விக்னேஷ் ஆகிய நான்கு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ’பெற்றோர்களே புரிந்துக்கொள்ளுங்கள்... இவ்வளவு தான் போக்சோ!’