தர்மபுரி: தன் பாலின ஈர்ப்பு விவகாரத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பென்னாகரம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நிலையில், அப்பெண் காவல் நிலைய கழிவறையினுள் சென்று கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடி வந்த போலீசார், கோவையில் அவரை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, தான் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது 3ஆம் ஆண்டு படித்த மாணவியுடன் நட்பு ஏற்பட்டதாகவும், நாளடைவில் அது தன்பாலின காதலாக மாறியதாகவும் கூறினார். தற்போது மாணவியின் தோழி கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், இந்த விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. இருவரும் சந்தித்துக் கொள்ளக்கூடாது என்று பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், அப்பெண்ணின் பிரிவைத் தாங்க முடியாத ஜூனியர் மாணவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கோவையில் இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர்.
பின்னர் இருவரும் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு இருவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது அந்த சீனியர் பெண் கழிவறைக்கு செல்வதாகக் கூறி தனது கழுத்து, கைகளில் பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார். இதில் காயமுற்றுக் கிடந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் இவ்விவகாரம் குறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களிடம் கேட்டபோது,
'இரண்டு இளம் பெண்களும் மேஜர். இளம் பெண்களின் பெற்றோர் தனது மகள் காணவில்லை என புகார் அளித்ததால் காவல்துறையினர் அவர்களைத் தேடி கண்டுபிடித்து காவல் நிலையத்தில் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இளம்பெண்கள் தங்கள் பெற்றோர்களிடம் செல்ல விரும்பவில்லை. இந்நிலையில் ஒருவர் கை அறுத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து தொடர்ந்து விசாரணை செய்தபோது இரண்டு இளம் பெண்களும் தங்கள் பெற்றோரிடம் செல்லவில்லை என்பதை தெரிவித்தனர்.
இருவரும் மேஜர் என்பதால் ஒருவர் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருபவர் இன்று அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து திரும்புவார். இருவரிடமும் உங்களுக்கு வேறு ஏதாவது அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டபோது எந்த அழுத்தமும் இல்லை என்றும்; தாங்கள் இருவரும் பெற்றோருடன் செல்ல மாட்டோம் என்று தெரிவித்தனர்’ இவ்வாறு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு லவ் டார்ச்சர்; இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை