தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பிளாஸ்டிக் கம்பெனியை மூடச் சொல்லுங்க..." - அறிவுரை கூறிய எம்எல்ஏவுக்கே அறிவுரை கூறிய பெண்மணி! - பிளாஸ்டிக் ஒழிப்பு

தருமபுரியில் மே தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது, பெண்மணி ஒருவர் குறுக்கிட்டு, முதலில் 'பிளாஸ்டிக் கம்பெனியை மூடச் சொல்லுங்க' என்று கூறியதால் சற்று நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Woman
தருமபுரி

By

Published : May 1, 2023, 9:04 PM IST

எம்எல்ஏவுக்கே அறிவுரை கூறிய பெண்மணி

தருமபுரி:தருமபுரி மாவட்டம், கடகத்தூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி இன்று(மே.1) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாமகவைச் சேர்ந்த தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "நாம் நமது வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்வது போல், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நினைத்தால் பிளாஸ்டிக்கை ஒழிக்கலாம். பிளாஸ்டிக்கால் அதிகப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பொருட்கள் வாங்கும்போது கடைகளில் இருந்து நாம் வாங்கி வரும் பிளாஸ்டிக் பைகள் கழிவுநீர் கால்வாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. அதனால், கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது" என்று கூறினார்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் குறுக்கிட்டு, "சார் ஒரு சிறு விண்ணப்பம். பிளாஸ்டிக் ஒழிப்பது பற்றி நீங்கள் சொல்வது சரிதான். அதற்கு முதலில் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனிகளை மூட வேண்டும்" என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், "இதே கருத்தை நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். நான் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து சட்டமன்றத்தில் பேசிய வீடியோ ஆதாரங்களை உங்களுக்கு வழங்குகிறேன். நீங்கள் கேட்டது நல்ல கேள்விதான். நானும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்துகிறேன். இதில் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும், நாமும் கொஞ்சம் விழிப்புணர்வாக இருக்கலாம். முடிந்த அளவு நமது சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கலாம்" என்று கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் அறிவுரை கூறிக்கொண்டிருந்தபோது, பெண்மணி லாஜிக்காக பேசியது, எம்எல்ஏவுக்கே பாடம் எடுப்பதுபோல இருந்தது என கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கூறினர்.

இதையும் படிங்க: "மதிமுகவை திமுகவுடன் இணைக்க எந்த திட்டமும் இல்லை" - வைகோ முற்றுப்புள்ளி!

ABOUT THE AUTHOR

...view details