தர்மபுரி: ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
தற்போது கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்வு, நீர் வரத்து குறைவு காரணமாக உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மடம் செக்போஸ்ட், ஒகேனக்கல் பேருந்து நிலையம், ஆலம்பாடி செக்போஸ்ட் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சோதனை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று காண்பிக்கப்பட வேண்டும். ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள், எண்ணெய் மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்பவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
சுற்றுலாப் பயணிகள் அருவி, ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க அனுமதி இல்லை. பரிசலில் சென்று சுற்றிப்பார்க்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அவசியம் அணியவேண்டும் என்று தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், விதிமுறைகளுடன் நாளை (செப்., 27) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:ராமோஜி பிலிம் சிட்டி: தெலங்கானா மாநிலத்தின் சிறந்த சுற்றுலாத் தலத்துக்கான விருது