தருமபுரி:உலகம் முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளும் மக்களிடையே மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, புத்தாடை, பட்டாசு மற்றும் உணவு. முக்கியமாகத் தீபாவளியில் ஆடை விற்பனையும், பட்டாசு விற்பனையும் களைகட்டும். குறிப்பாகத் தீபாவளியையும் பட்டாசையும் பிரிக்கவே முடியாது என்று கூட கூறலாம்.
தற்போது உள்ள குழந்தைகளிலிருந்து இளைஞர்கள் வரை தீபாவளிக்குப் பட்டாசு கிடைக்கவில்லை என்றால் வீட்டையே ரெண்டாக்கிவிடுகிறார். ஆனால் அப்படிப்பட்ட மகிழ்ச்சியைக் கூட பறவைகள் சரணாலாம் மற்றும் பறவைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பறவைகளுக்காகத் தியாகம் செய்கிறார்கள் என்றால் மிகையாகாது.
அந்த வரிசையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட பல்லேனஹள்ளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மூன்று பெரிய புளியமரங்கள் மற்றும் ஒரு ஆலமரம் உள்ளது. இந்த 4 மரங்களும் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.
மேலும் இந்த 4 மரங்கள் குடையாக அமைந்துள்ள பகுதியில் கீழ்ப் பகுதியில் அப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் வணங்கும் சக்தி வாய்ந்த முனியப்பன் சாமி கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலுக்கு மேல் புறத்தில் பறந்து விரிந்த புளியமரம் மற்றும் ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் தங்கள் வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன.