கிராமம் தொலைந்த கதை:
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கோட்டப்பட்டி ஊராட்சியில் கோட்டப்பட்டி, சூரநத்தம், மங்களப்பட்டி, அண்ணாநகர், குழுமி நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. கோட்டப்பட்டி, சிட்லிங் பகுதிகளில் அதிகளவில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கோட்டப்பட்டி - சிட்லிங் செல்லும் சாலை வனப்பகுதியைக் கடந்து, அம்மாபேட்டை ஆற்றை ஒட்டி, சேலத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தைச் சந்திரன் என்பவருக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
அவர் இன்று வரை அந்த நிலத்தைப் பராமரித்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென சுந்தரம், நிலத்தை விற்பனை செய்யப் போவதாக சந்திரனிடம் தெரிவித்துள்ளார். அப்போது நிலத்தை விற்பதாக இருந்தால் எனக்கே கொடுத்து விடுங்கள், நான் வாங்கிக் கொள்கிறேன் என சந்திரன் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அதே பகுதியில் வசித்து வரும் ஈரோட்டைச் சேர்ந்த குணசேகரன், இந்த நிலத்தைச் சந்திரனுக்குத் தெரியாமல் வாங்கியுள்ளார். தொடர்ந்து, சந்திரனிடம் நான் இந்த நிலத்தை விலைக்கு வாங்கிவிட்டேன், நீங்கள் நிலத்தைவிட்டு வெளியேறுங்கள் என்று எச்சரித்துள்ளார்.
அதற்குச் சந்திரன், "கடந்த 40 ஆண்டுகளாக நான் இந்த நிலத்தைப் பராமரித்து வந்துள்ளேன். நீங்கள் நிலம் விற்றவரை வரச்சொல்லுங்கள் நான் அவரிடம் பேசிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இதில், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்துள்ளது. இது தொடர்பாக கோட்டுப்பட்டி காவல் நிலையத்தில் சந்திரன் புகார் கொடுத்துள்ளனர்.
அதன்பின் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, நிலத்திற்கான ஆதாரங்களைக் கேட்டுள்ளனர். அப்போது, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈசி எடுத்துப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த நிலம் 1937-ஆம் ஆண்டு 'அம்மாபேட்டை' என்ற மலை கிராமமாக இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அரசு அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், 1937ஆம் ஆண்டு சேலம் ஜில்லா அரூர் தாலுக்கா கோட்டப்பட்டி - சிட்டிலிங் செல்லும் சாலையில் அம்மாபேட்டை என்ற மலைக் கிராமம் இருந்ததும். அங்கு மலைவாழ் மக்கள் வீடுகட்டி குடியிருந்து வந்ததும் தெரியவந்தது.
அப்போது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதியிலிருந்த மலைவாழ் இனத்தைச் சேர்ந்த மக்கள், பிழைப்பிற்காக வெளியூர் சென்றபோது, அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் லட்சுமணன், சுமார் 14 ஏக்கர் கொண்ட அந்த கிராமத்தை தன்பெயருக்கும், அவரது தம்பி கொளந்தை பெயருக்கும் பட்டா மாற்றிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.