தருமபுரி:தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களில் மது பிரியர்கள் 15 கிலோ மீட்டர் பயணம் செய்து பாப்பாரப்பட்டிக்கு வந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். பாப்பாரப்பட்டி பகுதியை சுற்றியுள்ள பூதி நத்தம், பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு உள்ளிட்ட மலைக்கிராமத்தைச் சார்ந்த ஒரு சிலா் டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானங்களை மொத்தமாக வாங்கி அவற்றை பெட்டி பெட்டியாக தங்கள் வீடுகளில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல முறை புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பீர் விற்பனை கொடிகட்டி பறக்கின்றன என்றும் இதனால், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பல மாணவர்கள் இவற்றை குடித்து சீரழிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த புதிநத்தம் கிராம மக்கள் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து மதுபானம் விற்ற ஜெயராமன் என்பவர் வீட்டை இன்று (ஏப்.29) முற்றுகையிட்டு வீட்டிலிருந்த மதுபானங்களை பெண்கள் ஆவேசமாக தூக்கி சாலையில் எறிந்து அடித்து உடைத்தனர். இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகளில் மதுபானம் ஆறாக வழிந்து ஓடியது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, மற்றொரு வீட்டில் பொட்டி பொட்டியாக இருந்த பீர் பாட்டில்களை போலீசார் கைப்பற்றி அதனை அவர்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.