தருமபுரி மாவட்டத்தில் உள்ள நான்கு ரோடு பகுதியில் அரசு பட்டுக்கூடு அங்காடி அமைந்துள்ளது. இங்கு தினசரி 3 டன் முதல் 4 டன் வரை பட்டுக்கூடுகள் விற்பனையாகிறது. தருமபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய வருகின்றனர்.
மற்ற மாவட்ட விவசாயிகள் பட்டுக்கூடுகளை தருமபுரி அங்காடியில் விற்க காரணம் என்னவென்றால், இங்கு பட்டுக்கூடுகள் ஏல முறையில் விற்கப்படுவதால் அதிக அளவு விலை கிடைக்கின்றது.
பட்டுக்கூடு விவசாயிகள் வேதனை
கரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக பட்டு நூல் விலை வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. பட்டு நூல் விலை குறைவின் காரணமாக விவசாயிகளிடமிருந்து வெண்பட்டு, மஞ்சள் பட்டு கூடுகளின் கொள்முதல் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக அதனை சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
மஞ்சள் பட்டு ஒரு கிலோ அதிகபட்ச விலை 165 ரூபாய்க்கும் வெண்பட்டு கிலோ 199 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சென்ற வருடம் மஞ்சள் பட்டு கிலோ 400 ரூபாய் வரையிலும் வெண்பட்டு 560 ரூபாய் வரையும் விற்பனையானது. இதேபோல் சென்ற வருடம் ஒரு கிலோ பட்டு நூலின் விலை நான்காயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தற்போது இரண்டாயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் பட்டு நூல் விவசாயிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து பட்டு நூல் உற்பத்தியாளர் பேசும்போது, "தற்போது வரலாறு காணாத அளவில் பட்டு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா பட்டு விலை வீழ்ச்சியின் காரணமாக பட்டுக்கூடு விலை குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பட்டுக்கூடு விலை வீழ்ச்சி அடையும் பொழுது அம்மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்கி மானியம் வழங்கி விலை வீழ்ச்சி அடையாமல் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பாதிப்பில்லாமல் விலை சம நிலையை ஏற்படுத்தி விவசாயிகளை பாதுகாக்கின்றனர்.
அம்மாநிலத்தில் செயல்படும் வசதிகள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே நமது மாநிலத்திலும் கூடுதல் நிதி ஒதுக்கி பட்டு நூல் விற்பனை விலை சரிவை கட்டுப்படுத்த வியாபாரிகள் சார்பில் அலுவலர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசு துரித நடவடிக்கை எடுத்து தனியாக நிதி ஒதுக்கி கொள்முதல் செய்யவேண்டும். அப்போதுதான் பட்டுநூலின் விலை உயரும், விவசாயிகளுக்கும் அதிக விலைக்கு பட்டுக்கூடுகள் விற்பனையாகும்" என்றார்.
மேலும் பட்டுக்கூடு விவசாயி கூறும்போது, "நாமக்கல்லிருந்து பட்டுக் கூடுகளை விற்பனைக்காக தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு கொண்டு வருகிறோம். பட்டுக்கூடு விலை 165 ரூபாய் என்ற குறைந்த அளவில் விற்பனை ஆவதால் உற்பத்தி செலவை விட குறைந்த அளவு வருவாய் கிடைப்பதால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். அரசு பட்டுக்கூடு கிலோ 400 ரூபாய்க்கு குறைந்தபட்ச விலைக்கு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். அரசு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் பட்டுக்கூடு கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுணங்கிய புதியம்புத்தூர் ரெடிமேட் ஜவுளி வியாபாரம் - வேதனையில் தொழிலாளர்கள்