தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் முலாம்பழம்ஏற்றிவந்த வேன் ஒன்று நிலைதடுமாறி, எதிரே வந்த லாரிமீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் ஓட்டுநர், கிளீனர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி காவல் துறையினர் உடனடியாக இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், வேன் ஓட்டுநர் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் ரமேஷ் (30) என்பதும், கிளீனர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கரா (20) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் நேற்று (மார்ச் 24) இரவு கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து முலாம்பழம் ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு சென்று கொண்டிருந்ததாகவும், தருமபுரி சவுளுர் மேம்பாலம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு முன்பு வேன் வந்தபோது, நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதி சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த லாரிமீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவந்தது.
இது குறித்து டவுன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.