அரசு கேபிள் டிவி நிறுவனத்தின், பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைப்பது குறித்து தருமபுரி ஆட்சியர் மலர்விழி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் ஒளிபரப்பு முறையில் செட்டாப் பாக்ஸ்களை வழங்கி வருகிறது.
செட்டாப் பாக்ஸ்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களைக் கொண்டு சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருக்கும் பொது மக்கள், உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டர்களிடம் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட செட்டாப் பாக்ஸ் பழுதடைந்து இருந்தாலோ அல்லது மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து இருந்தாலோ அரசு வழங்கிய செட்டாப் பாக்ஸ்களை அந்தந்த பகுதி கேபிள் ஆபரேட்டர்களின் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதனை செய்யத் தவறும் பட்சத்தில் அந்நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.