தருமபுரி:நல்லம்பள்ளி அருகே, மனு அளித்ததின் பேரில் நில அளவீடு செய்வதற்கு அதிகாரிகளுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீது மாட்டுச் சாணத்தை கரைத்து ஊற்றிய சம்பவம் தொடர்பாக, தொப்பூர் போலீசார் இரண்டு பெண்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாலம்மாள். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இவருக்கும் இவரது அக்கா முனியம்மாள் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால். சாலம்மாள் தன்னுடைய நிலத்தை சர்வேயர் மூலமாக அளவீடு செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, நிலத்தை அளவீடு செய்ய நல்லம்பள்ளி தாசில்தாரிடம் மனு அளித்தார். மனுவின் பேரில் பாகலஅள்ளி வி.ஏ.ஓ. மாதேஷ் மற்றும் சர்வேயர் ஜோதி உள்ளிட்டோர், தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் தண்டுகாரம்பட்டி ஏரி அருகே உள்ள சாலம்மாளுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய நேற்று(ஜன.4) சென்றுள்ளனர்.
நிலத்தை அளவீடு செய்வது தொடர்பாக முன்னதாகவே, முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் இருவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று அப்பகுதியில் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, கோபமடைந்த முனியம்மாள் மகள் மாதம்மாள், அங்கு வந்த நில உரிமையாளர் சாலம்மாள், அவருடன் வந்த பொதுமக்கள் மற்றும் தொப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் மீது கரைத்து வைத்திருந்த மாட்டுச் சாணத்தை ஊற்றியதோடு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், நில அளவீடு செய்வதற்கு அதிகாரிகளுடன் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் மீது கரைத்து வைத்த மாட்டுச் சாணத்தை ஊற்றிய சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சர்வேயர் ஜோதி, இதுகுறித்து தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் மீது சாணத்தை ஊற்றிய முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் ஆகியோரை தொப்பூர் போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:முதலமைச்சர் காணொளியில் பங்கேற்ற நிகழ்ச்சி.. கலந்துகொள்ளாத அதிகாரிகள் காலியாக இருந்த சேர்கள்!