தருமபுரி:குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களைத் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் துறையினர் நேற்று (டிசம்பர் 9) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி பாளையம் சுங்க சாவடி பகுதியில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் காலை முதல் வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை சோதனை செய்தனர்.
அதனடிப்படையில் பெங்களூருவிலிருந்து, கேரளாவுக்குச் சென்ற ஈச்சர் வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தனர். ஓட்டுநர் ரஸித் மற்றும் கிளீனர் அஸ்ரப் அலி வாகனத்தில் மாட்டுத்தீவனம் ஏற்றிச் செல்வதாகக் கூறி அதற்கான பில்களை காவல் துறையிடம் காண்பித்துள்ளனர்.
பின்னர் வாகனத்தை சோதனை செய்த போது 118 மூட்டை சாக்குப்பைக்குள், 3500 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 23 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது.
பின்னர் இருவரையும் காவலர்கள் கைது செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இதேபோல் அதியமான் கோட்டை அருகே ஒட்டப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த சூரியா, கேசவன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.