தருமபுரி: தருமபுரியில் சாலை போக்குவரத்து சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எமதர்மன் வேடமணிந்த கிராமிய நாடக கலைஞர்கள் தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாதவர்களை எச்சரித்து, நூதன முறையில் விழிப்புணர்வு செய்தார்.
தருமபுரி மாவட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தருமபுரி நான்கு ரோட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராமிய நாடக கலைஞர்கள் எமதர்மன், சித்திரகுப்தர், தூதுவர்கள் வேடம் அணிந்து வந்து சாலை விதிகளை மதிக்காமல் வருபவர்களைப் பிடித்து சாலை விதிகள் குறித்து அறிவுறுத்தினர்.
இதில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள், மூன்று பேர் பயணம் செய்பவர்கள், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாதவர்கள் பிடித்து வந்து, சாட்டை வைத்துப் பயமுறுத்தி, பூலோகத்தில் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும், தலைக்கவசம் அணியாவிட்டால் பத்தாயிரம் அபராதம் என்பது குறித்துத் தெரிவித்தும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும் என்று விதிகளை எடுத்து கூறினர்.
அதேபோல் செல்போன்களில் பேசியபடி பயணிக்கக் கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது, சிறு பிள்ளைகளிடம் இரு சக்கர வாகனங்களைக் கொடுக்கக் கூடாது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை எடுத்துக் கூறி, எச்சரிக்கைகளை விடுத்தனர்.