தருமபுரி:பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு இருக்கும் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து விடுமுறையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகையை பயன்படுத்திக் கொண்ட பரிசல் ஓட்டிகள் அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக வசூல் செய்து வருகின்றனர். மேலும், டிக்கெட்டுகளை பரிசல் ஓட்டிகள் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் சுற்றுலா பயணிகள் மத்தியில் எழுந்து வருகின்றன. முன்னதாக, மாமரத்துக்கடவு பரிசல் துறை முதல் மணல் மேடு வரை அரசு ரூபாய் 750ஐ கட்டணமாக நிர்ணயித்துள்ளது. தற்போது மாமரத்துக்கடவு பரிசல் துறை முதல் மணல் மேடு வரை ஒரு மணி நேரம் 30 நிமிடங்களுக்கு பரிசலில் செல்ல கட்டணம் இரண்டு மடங்காக அதிகரித்து 1500 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், பரிசல் ஓட்டிகள் பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் பரிசலில் பயணம் செய்ய நான்கு நபர்களுக்கு 4000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே பரிசல் இயக்கப்படும் என பரிசல் ஓட்டிகள் அடாவடி செய்து வசூல் செய்கின்றனர். தர மறுக்கும் சுற்றுலா பயணிகளை ஆற்றில் மறுக்கரைக்கு அழைத்து சென்று திரும்ப அழைத்து வர மறுத்து மிரட்டல் விடுகின்றனர்.