தருமபுரி: கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த எட்டு மாதங்களாக ஒகேனக்கல் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்த நிலையில், செப்டம்பர் 27 ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தைத் திறக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று (செப். 27) பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அவர், "சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பக்கத்து மாநிலங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலிருந்து வருவதற்காகவும், இந்தச் சுற்றுலா மையத்தில் மகிழ்ச்சியோடு இருப்பதற்காகவும் மட்டுமே சுற்றுலா மையம் இன்று திறக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மீன் சமையல், ஆயில் மசாஜ் செய்துகொண்டு அருவியில் குளிப்பது இங்குச் சிறப்பான ஒன்று. அருவியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. அக்டோபா் 1ஆம் தேதிமுதல் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றுலா மையம் பொருளாதார மேம்பாட்டில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களையும் மேம்படுத்த வேண்டும். பயணிகளை ஈர்க்கும் வகையில், மனமகிழ் இடங்கள், பொழுதுபோக்கு மையங்களை அதிகமாக உருவாக்க வேண்டும்.