தருமபுரி: பென்னாகரம் சுற்றுலாத் தலத்தில் துறையின் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வுமேற்கொண்டார். ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐவர் பவானி உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டு பரிசலில் பயணம் செய்து சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து ஆய்வுமேற்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மழை பொழிய ஆரம்பித்தது. இருப்பினும் தொடர்ந்து தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வுசெய்தார்.
அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு இதனையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர், "ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த பெரும் திட்டம் வகுக்கப்பட்டுத் தயாராக உள்ளது.
தற்போது கரோனா பரவல் காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வது குறைந்துள்ளது. சமையலறை, அடிப்படை வசதிகள், பொதுக்கழிப்பிடம், உடை மாற்றும் அறைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் வரலாற்றில் இல்லாத அளவு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த கூடுதல் நிதியைக் கேட்டு முதலமைச்சரிடம் கோரிக்கைவைத்தேன். முதலமைச்சர் உடனே அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு சுற்றுலாத் தலத்தையும் மேம்படுத்துவதற்காகத் தனியாக நிதி ஒதுக்கி கவனம் செலுத்தி சுற்றுலாத் தலத்தின் அழகு குறையாமல் புதுப்பிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.