தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, காரிமங்கலம், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்கின்றனர்.
இங்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து தக்காளி விலை இரண்டு மாதங்களாக கிலோவுக்கு 30 ரூபாய் வரை விற்பனையானது. தக்காளிப் பழங்கள் விற்பனை விலை தொடர்ந்து சம நிலையில் இருந்ததால் விவசாயிகள் அதிக அளவு சாகுபடியில் ஈடுபட்டனர்.
தக்காளி சாகுபடி பரப்பு அதிகரித்ததன் காரணமாக சந்தைக்கு வரும் பழங்கள் வரத்தும் அதிகரித்தது. இந்நிலையில் இதன் எதிரொலியாக கடந்த ஐந்து தினங்களாக தக்காளி விலை திடீரென கிலோ எட்டு ரூபாயாக சரிந்துள்ளது.
இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்து விற்பனையாகும் என்றும், இந்த ஆண்டு வரத்து அதிகரித்ததால் லாபம் கிடைக்கும் எனப் பயிரிட்ட விவசாயிகளுக்கு திடீர் விலை வீழ்ச்சி கடும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.