தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் சிறந்த சேவையாற்றும் காவல் நிலையங்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் ,கேடயமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. வருகிற குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையங்களுக்கு பரிசு வழங்குவதற்கான மூன்று காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
தருமபுரி மாவட்ட காவல்துறை 3 உட்கோட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 27 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 900க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தருமபுரி நகர காவல் நிலையம் ஆங்கிலேயர்கள் காலத்தில் 1862-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தில் ஒரு ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் 80 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சிறந்த காவல் நிலையத்திற்கான விருது பெற தகுதிகள் :
ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெறுதல், குற்றவாளிகளை கண்டுபிடித்தல், அனைத்து பதிவேடுகளும் கணினியில் பயன்படுத்துதல், கொலைக் குற்றங்களை விரைந்து கண்டுபிடித்தல், காவல் நிலையத்தில் சுற்றுச்சூழலை பராமரித்தல், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்தல், பதிவேடுகளை சீரிய முறையில் பராமரித்தல் உள்ளிட்ட 27 வகையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை சரியாக பின்பற்றும் காவல் நிலையங்களே தகுதி பெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.