தர்மபுரி: தர்மபுரிவேல்பால் டிப்போ அருகே உள்ள சந்தைப்பேட்டைப்பகுதியில் குடியிருக்கும் வீட்டிலிருந்து, வேறு வீட்டிற்கு மாற்ற பொருட்களைக்கயிறு கட்டி இறக்கியபோது, மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் இலியாஸ், கோபி, பச்சையப்பன் ஆகிய மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சந்தைப்பேட்டையில் பச்சையப்பன் என்பவருக்குச்சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இரண்டாவது மாடியில் இலியாஸ் (70) குடியிருந்து வருகிறார். இவர் பள்ளி வாகன ஓட்டுநராக உள்ளார். இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் பச்சையப்பன் என்பவர் வீட்டில் 9 ஆண்டுகளாக குடியிருந்து வந்துள்ளார்.
இலியாஸின் மூத்த மகனுக்குத்திருமணம் நடைபெற இருப்பதால், வாடகைக்கு வேறு ஒரு வீடு பார்த்து அங்கு குடிபெயர்வதற்காக இன்று காலை வீட்டு உரிமையாளர் பச்சையப்பனோடு, கோபி (23) மற்றும் குமார் (23) ஆகிய 4 பேரும் இரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை கயிற்றால் கட்டி கீழே இறக்க முயற்சித்துள்ளனர்.