சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ்சுதீன். இவரது மனைவி அபிதா (38), மூத்த மகன் முகமது அஷ்வாக், மகள் அபிஷா பாத்திமா (14), இளைய மகன் முகமது நவாஸ் (9), ஆகியோர் விடுமுறை என்பதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு, பல்வேறு பகுதிகளைச் சுற்றிப்பார்த்த அவர்கள், ஒகேனக்கல் அருகேவுள்ள ஆலாம்பாடி என்கிற பகுதியில் அமைந்திருக்கும் காவிரி ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரியாஸ்சுதீன், அவரது மனைவி, மகள், இளைய மகன் ஆகியோர் ஆற்றில் மூழ்கினர்.
இதனைக் கண்ட மூத்த மகன் முகமது அஷ்வாக், நீச்சல் தெரியாத நிலையிலும் ஆற்றில் குதித்து தந்தையை காப்பாற்றி கரைசேர்த்தார். பின்னர், அவரது தாய் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருப்பதைக் கண்ட அவர் உடனடியாகத் தாயைக் காப்பற்ற முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவரை மீட்க முடியவில்லை.
இதனால், கரையோரமிருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் முகமது அஷ்வாக்கின் குரலைச் சிறிதும் பொருட்படுத்தாமல், தான் வைத்திருந்த செல்போனில் ஆற்றில் அடித்துச் செல்பவர்களை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். இதனால், முகமது அஷ்வாக் தனது தாயைச் சடலமாக மீட்டார். மேலும், அவரது தந்தை, தம்பியின் உடலை மீட்க முடியவில்லை.