தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி பில்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (80), அவரது மனைவி சுலோச்சனா (75). இவர்கள் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள். இவரது பிள்ளைகள் திருமணமாகி சேலத்தில் வசித்துவருகின்றனர்.
வயதான தம்பதி வீட்டில் தனியாக வசித்து வந்தபோது கடந்த 12ஆம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர். கொலை சம்பவம் தொடர்காக தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் சம்பவ இடத்தில் ஆய்வுசெய்தார்.
காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அண்ணாதுரை, சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைக் கண்டறிய காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதனை அடுத்து காவல் துறையினர் கொலை நடைபெற்ற இடங்களில் ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், வயதான தம்பதிக்கு இரண்டு வீடுகள் உள்ளன, வீட்டு வாசலில் நள்ளிரவில் தூங்கும் வழக்கம் இருந்தது என்பது தெரியவந்தது. மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சுலோச்சனா அணிந்திருந்த கம்மல், தாலிக்கொடி மட்டும் பறித்துச் சென்றதைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து தம்பதி ஆதாயத்திற்காக கொலைசெய்யப்பட்டதை உறுதிசெய்த காவல் துறையினர் பில்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.
பில் பருத்தி புத்தர் நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் பிரகாஷ்ராஜ். பாரதி நகரைச் சேர்ந்த முருகன் மகன் முகேஷ், சரவணன் மகன் ஹாரிஸ் ஆகியோரைப் பிடித்து விசாரித்தபோது தம்பதியைக் கொலைசெய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.