தமிழ்நாடு

tamil nadu

‘2024 தேர்தலில் பாஜக அரசை தூக்கி எறிய சாத்தியக்கூறு அமையும்’ - தருமபுரி எம்.பி.

By

Published : May 15, 2023, 7:54 PM IST

தருமபுரி ஆட்சியருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை, திட்டங்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர் எனவும் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசை தூக்கி எறிய சாத்தியக்கூறு அமையும் என தருமபுரி எம்பி செந்தில்குமார் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் செந்தில்குமார் எம்.பி.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் இன்று (மே 15) தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் தூக்கிகளை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ரயில் நிலையத்தின் முதல் நடைபாதையில் அதிக அளவிலான ரயில்கள் நிற்பதில்லை. மூன்றாவது நடைமேடையில் தான் நிற்கிறது. இதற்காக மின் தூக்கி அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை சந்தித்து முறையிட்டதன் விளைவாக மின் தூக்கிகள் அமைக்கப்பட்டு இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

மொரப்பூா் தருமபுரி ரயில் திட்டம் தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அது ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தருமபுரியில் இருந்து சென்னை செல்வதற்கான தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற 17ஆம் தேதி நில எடுப்புக்காக ஆணை கிடைத்துள்ளது.

15 வருவாய் வட்டங்களில் இரண்டு வட்டங்களில் உள்ள நில உரிமையாளர்களுக்கு நில எடுப்புக்கான சர்வே எண்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள வட்டங்களில் வேலைகள் நடைபெற்று வருகிறது. 70 சதவீதப் பணிகள் நிறைவடைந்தாலே ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும்.

மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி, 75 ஆண்டுகளாக இல்லாமல் இருந்த அரசநத்தம், கலசப்பாடி கிராம மக்களுக்கு சாலை வசதி பெற்றுத் தந்திருக்கிறோம். அதைப் போலவே பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட கோட்டூர் மலைக் கிராமத்திற்கு சாலை அமைக்க இன்று அனுமதி கிடைத்துள்ளது. சாலை வசதி வேண்டுமென்று கரோனா நிவாரண நிதி வழங்கச் சென்றபோது இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தார்கள்.

அவர்கள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு அனுமதி பெற்று தந்துள்ளேன். பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்தில் இப்பகுதியில் சாலை அமைக்கப்படும். ஏரிமலைக் கிராமத்திற்கும் சாலை வசதி ஏற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடகாவில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசு பலத்தை வைத்து தேர்தலுக்குப் பிறகு ஒற்றுமையுடன் இருந்தால் 2024 பாஜக அரசை தூக்கி எறிய சாத்தியக்கூறு அமையும். மற்ற மாநில தலைவர்களுடன் நல்லுறவில் இருப்பவர் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதன் மூலமாக தலைமை தாங்கி வெற்றியை ஈட்டி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

பாஜக அண்ணாமலையை கேவலப்படுத்தும் பாஜக ஐடி விங், ஒரு ஓட்டு வாங்கிய அண்ணாமலை என்று குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன், அது தவறான செய்தி. பாஜக ஐடி விங் பதிவிட்டு இருந்தார்கள் எங்கள் தலைவர் மூன்று பூத்தில் ஒவ்வொரு ஓட்டு வாங்கியதாக பதிவிட்டு இருக்கிறார்கள். அதனால், மன்னிப்பு கேட்கிறேன். கர்நாடகா சென்று வெற்றியை உறுதி செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் அண்ணாமலையை குறைவாக கூறவில்லை பாஜகவைச் சார்ந்த ஐடிவிங் நண்பர்கள் தான் அவரை அவமானப்படுத்துகிறார்கள். பாஜக ஐடி விங்கை சேர்ந்த கத்துக் குட்டிகள் அவரை அவமானப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசிடம் பேசக்கூடிய திட்டங்களை சுலபமாகப் பேசி பெற்று விடலாம். மத்திய அரசிடமிருந்து 800 கோடி ரூபாய்க்கு மேல் சாலை அமைக்க நிதி பெறப்பட்டுள்ளது. அதியமான்கோட்டை - பெங்களூர் செல்லும் சாலை, மஞ்சுவாடி - பள்ளிப்பட்டி சாலை, தொப்பூர் - கணவாய் சாலை, தொப்பூரில் இருந்து சங்ககிரி சாலை போன்றவை எதிலும் நான் கையெழுத்து போடத்தேவையில்லை. கோரிக்கை வைத்தாலே நடைபெறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு தொகுதி நிதியிலிருந்து கையெழுத்து போட்டு நடைபெறும் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

பிடிஓ அளவிலான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தருமபுரி ஆட்சியரிடம் ஒத்துழைப்பு இருக்கிறது. தடையின்மை சான்று உள்ளிட்டவைக்கு அணுகும் போது அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. முதலமைச்சர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு தமிழ்நாட்டை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்பு இருந்தும் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகள் ஒத்துழைப்பு தரமறுக்கின்றனர். கிராமத்திற்கு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் செய்வதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை.

இது குறித்து மாவட்ட வளர்ச்சிக் குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துவிட்டு ஒத்துழைப்பு கொடுக்காத அதிகாரிகள் மீது உள்துறை செயலாளர் அல்லது அவர்கள் தொடர்புடைய செயலாளர்களிடம் வலியுறுத்துவேன். நெடுஞ்சாலைத் துறையில் அனுமதி கோரப்பட்டு பல மாதமாகியும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. நகராட்சியில் மனு கொடுக்கப்பட்டு இரண்டு நாளிலேயே அனுமதி பெறப்பட்டுவிட்டது.

அதிகாரிகள் மேம்போக்காக தள்ளுபடி செய்வதும் அல்லது காரணமே கூறாமல் கிடப்பில் வைப்பதும் தொடர்கிறது. முதலமைச்சர் கொண்டுவரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது அதிகாரிகள் தான். அவர்கள் தயவு செய்து மாற்றிக் கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு தொழில்நுட்ப (iTNT) மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details