தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா பேசும்போது, "இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும்.
அதன் படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளிலும் வருகின்ற 21ஆம் தேதிமுதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 10ஆம் தேதிவரை பள்ளிச்செல்ல, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய கணக்கெடுப்பு பணி தொடங்கப்படுகிறது.
இக்கணக்கெடுப்பு பணியில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்த கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்படும் குழந்தைகள் முறையான பள்ளிகள், சிறப்பு பயிற்சி மையங்கள் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆயத்த பயிற்சி மையங்களில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் கல்வித்திறன் மேம்பாடு அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.