தர்மபுரி:நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட அதியமான்கோட்டை மேம்பாலம் கட்டுமானம் 2017ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு கட்டுமானப்பணிகள் முடிவடைந்தது. ரயில்வே பாதையின் மேல் கட்டுமானப்பணிகள் கரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் கிடப்பில் இருந்தது.
தற்பொழுது பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று(அக்.14) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இப்பாலத்தை திறந்துவைத்தார். தர்மபுரி அதியமான்கோட்டை மேம்பாலம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என் வி. செந்தில்குமார், தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அதனையடுத்து மேம்பாலப்பணிகள் ஏன் காலதாமதம் என்று தர்மபுரி எம்.பி விளக்கம்:இது குறித்து பேசிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார், 'மேம்பாலம் என்பது மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து செய்யும் பணி. மாநில அரசின்சார்பில் 2019ஆம் ஆண்டிலேயே இரண்டு பக்கத்திலும் பாலப்பணி முடிக்கப்பட்டது. சாலையின் மையப்பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அமைப்புப்பணி அமைப்பது மத்திய அரசின் பணியாக இருந்தது.
5ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த அதியமான்கோட்டை மேம்பாலம்! நான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை 9 முறை ரயில்வே துறை அமைச்சர் ரயில்வே பொது மேலாளர் மற்றும் கடிதப்போக்குவரத்து மூலமாக தொடர்ந்து அறிவுறுத்தி வந்தேன். கரோனா பரவல் காரணமாகப் பணிகள் நடைபெறாமல் இருந்தது. தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் இன்று அதியமான்கோட்டை மேம்பாலம் திறப்பு விழா நடைபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ரயில்வே துறை சார்ந்த பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. மொரப்பூர் ரயில் நிலையத்தை அழகுப்படுத்தி இருக்கிறோம். லிஃப்ட் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி ரயில் நிலையத்திலும் லிஃப்ட் வசதி அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல் ரயில்வே நிலையம் வரை சேதமான சாலைகளை சீரமைக்க டெண்டர் பணிகள் தொடங்கியுள்ளன.
டெண்டர் விடப்பட்டு 15 நாட்களில் சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்படும். வெண்ணாம்பட்டி மேம்பாலம் பணிகள் பாரதிபுரம் 66 அடி சாலை வழியாக ரயில்வே மேம்பால கட்டுமானப்பணிகள் உடனடியாக தொடங்கப்படும். மொரப்பூர் ரயில்வே நில அளவைப்பணிகள் தீபாவளி பண்டிகைக்கு முன்பு நிறைவடையும்’ என நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:நவம்பர் 22ல் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத்தேர்தல்