தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஈ.பி.காலனியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (72). இவர் கடந்த சில நாள்களாக மூச்சுத்திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமானதால், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கரோனா தொற்று அச்சத்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்களிடம் வலியுறுத்தினர். அதன்படி, தேவேந்திரனை அவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நோயாளி தேவேந்திரனுடன் ஆண்கள் எவரும் வராததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக உள்ளே அனுமதிக்கவில்லை.