கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கி செல்வதற்கு அதிகப்படியான அளவில் கூட்டமாக கூடுவதால் நோய் தொற்று எளிமையாக பரவி விடும் சூழல் உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு அரசு காய்கறிகள் சந்தையை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் திறக்க உத்தரவிட்டுருந்தது. ஆனால் காய்கறிகள் கிடைக்காது என்ற எண்ணத்தில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு சந்தைகளில் வாங்க கூட்டமாக கூடுகின்றனர்.
மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் காய்கறி சந்தைகள் பல்வேறு இடங்களில் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பில் முதன்முறையாக வாகனம் மூலம் நடமாடும் காய்கறிக் கடை இயக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் காய்கறிக் கடையில் மக்களுக்குத் தேவையான அனைத்து வகை காய்கறிகளும் கிடைக்கிறது.
தினமும் காலை 6 மணி முதல் தெருத்தெருவாக வாகனத்தில் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த வாகனம் வரும் இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை பின்பற்றி தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள் குறைந்த விலையில் அவர்களின் வீடுகளுக்கருகிலேயே வந்து விற்பனை செய்யப்படுவதால் இதற்கு அரூர் பகுதி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: அழுகும் பழங்கள்! - வேதனையில் விவசாயிகள்