தர்மபுரி: கேரள மாநிலத்தில், தமிழ்நாட்டைச்சேர்ந்த பத்மா உட்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். பத்மா, தர்மபுரி மாவட்டம் அரக்காசனஅள்ளி அடுத்த எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் ரங்கன். உயிரிழந்த பத்மா மற்றும் அவரது கணவர் ரங்கன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் வேலை செய்துவந்துள்ளனர்.
பண்டிகை மற்றும் ஊர்த்திருவிழாக்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு வந்துவிட்டு, மீண்டும் கேரளா மாநிலத்திற்குச் சென்று வேலை செய்து வந்துள்ளனர்.
பத்மாவின் கணவர் ரங்கன் வயது மூப்புக்காரணமாக சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மா உயிரிழந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வரவே, பத்மா உடலை அடையாளம் காட்டுவதற்காக பத்மாவின் தங்கை பழனியம்மாள் மற்றும் அவரது மகன் செல்வராசு, உறவினர்கள் ராமு, முனியப்பன் உள்ளிட்ட நான்கு பேர் கேரள மாநிலம் சென்றுள்ளனர்.
உடல் அழுகிய நிலையில் இருப்பதால் உயிரிழந்தது பத்மா தானா என அடையாளம் காண முடியவில்லை என பத்மாவின் உறவினர்கள் கேரளாவின் பத்தனம்தீட்டா மாவட்டத்தில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். தங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெண் நரபலி கொடுக்கப்பட்டதால் எர்ரப்பட்டி கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தமிழக பெண்ணின் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் இதையும் படிங்க:கேரளாவில் நடந்த கொடூரமான நரபலி சம்பவம்... உறைய வைக்கும் பின்னணி...!