தர்மபுரி: பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணியின் தம்பி மகள் திருமணம் ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாஸ், ராஜ்யசபா உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர்.
ராமதாஸ் தமிழ் முறைப்படி உறுதிமொழி சொல்ல மணப்பெண், மணமகன் உறுதிமொழி வாசித்து தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ், 'பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் போராட்டங்கள் காரணமாகத்தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறியது என்றும் இதனால் தான் தருமபுரி மாவட்ட மக்கள் தூய்மையான குடிநீரை குடித்து வருகின்றனர் என்றார்.
தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் நீர் பாசனத் திட்டங்களுக்கு பாமக தான் முக்கிய காரணம் என உறுதிபட தெரிவித்த அவர், எந்த கட்சியையும் சாராமல் இருக்கும் 55 சதவீத மக்கள் தான் தேர்தல் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பவர்கள் என்றார். இந்த திருமணத்தில் அரசியல் கட்சிகளை சார்ந்தோர், சாராதோர் என அனைவரும் கலந்து கொண்டுள்ளதால், மாவட்ட வளர்ச்சிக்கு பாமகவின் பங்களிப்பை விளக்குவதாக கூறினார்.