தருமபுரி: பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை உள்ளது. வழக்கமாக இன்று (மார்ச்.16) காலை பட்டாசு தயாரிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது பட்டாசு மருந்து நிரப்பும் பொழுது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்விபத்தில் அங்கு வேலை செய்திருந்த பழனியம்மாள்(வயது 70) மற்றும் முனியம்மாள் (வயது 50) ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் சிவலிங்கம் என்பவர் சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் நான்கு பெண்கள் வேலை செய்து வந்து உள்ளனர்.
இந்நிலையில் விபத்து ஏற்பட்ட போது ஒரு பெண் அருகிலிருந்த குடோனுக்கு வேலைக்குச் சென்றதால் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள சிவலிங்கத்திற்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
விபத்து நடந்த பட்டாசு அலையில் அதிகளவில் நாட்டுப் பட்டாசுகளே தயாரிக்கப்படுவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள செய்திக் குறிப்பில், "தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் நாகதாசம்பட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், முனியம்மாள், பழனியம்மாள் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தியினை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சிவலிங்கத்திற்கு உயர் ரக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன். மீட்பு பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்க்ள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் மூலம் அறிந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரிகளின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிவலிங்கத்திற்கு ஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டு உள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:Parliament Adjourned: 4-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!