தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கொடைவள்ளல் அதியமான் கோட்டம் புதுப்பிப்பு பணியில் திருப்தி இல்லை" - சட்டப்பேரவை உறுதிமொழி குழு!

Adhiyaman Kottai: தருமபுரியில் கொடைவள்ளல் அதியமான் கோட்டத்தில் ரூ.98 லட்சம் மதிப்பில் நடக்கும் புனரமைப்பு பணியில் திருப்தி இல்லை என சட்டப்பேரவை உறுதிமொழி குழு தெரிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 10:49 PM IST

தருமபுரி :தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டங்கள் வாரியாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் உறுதிமொழி குழு இன்று (நவ. 29) ஆய்வு செய்தது.

இதில் சுமார் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இணைப்பு கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை வேல்முருகன் தலைமையிலான உறுதிமொழி குழு ஆய்வு செய்தது. அப்பொழுது அரசு ஒதுக்கப்பட்ட நிதியில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து அக்குழுவினர் கேட்டறிந்தனர்.

அதேபோல், பணிகள் முழுவதும் தரமாக இருக்கின்றனவா? என்று ஆய்வு செய்தனர். மேலும் ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது? மிச்சம் எவ்வளவு தொகை இருக்கிறது? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து அதியமான்கோட்டையில் செய்தி விளம்பரத்துறை சார்பில் கட்டப்பட்ட வள்ளல் அதியமான் கோட்டம் ரூ.98 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அதியமான் கோட்டத்தில் வள்ளல் அதியமானின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவற்றை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், மின்னொளியில் அமைத்து புதுப்பிக்கும் பணிக்காக ரூ.98 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், போதிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. இதனை கண்டு உறுதிமொழி குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எதிர்கால சந்ததியினரின் கொடைவள்ளல் அதியமான் புகழ் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், அந்த நோக்கத்திற்காக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கி கொடுத்துள்ளார். ஆனால், அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. இந்த புதுப்பித்தல் பணியில் திருப்தி இல்லை என வேல்முருகன் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

மேலும் இந்த பணியை மின்னொளி மூலம் அதிகமான வள்ளல் அதியமானின் வாழ்க்கை வரலாறு அமைத்துக் கொடுத்து பணிகளை முடிக்க வேண்டும். அதற்கு தேவையான நிதிகளை சம்பந்தப்பட்ட துறையிலோ அல்லது மாவட்ட ஆட்சியரிடம் பெற்று முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இந்த ஆய்வின்போது, ரூ.98 லட்சத்திற்கு வெறுமனே கட்டிடத்திற்கு வண்ணம் பூச்சி, சிறிய சிறிய பணிகள் மட்டும் செய்திருந்ததால், உறுதிமொழி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட குழுவில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இந்த ஆய்வில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் சித்த மருத்துவம்! சித்த மருத்துவர் ஜெ.பி.வெண்தாமரைச்செல்வி கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details