தர்மபுரி மாவட்டம், மொரப்பூரிலிருந்து மருதிப்பட்டி வழியாக, வெளாம்பட்டி, தொட்டம்பட்டி, ஈச்சம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரதான சாலை செல்கிறது. இந்தச் சாலையில் மொரப்பூர்-மருதிப்பட்டி சாலையில், தொட்டம்பட்டி செல்லும் பிரிவு சாலை அருகே சாலையின் இருபுறத்திலும் திடீரென மண் உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இது பார்ப்பதற்கு சிறிய அளவு பள்ளமாக இருந்தாலும், இந்தப் பகுதியில் சாலையின் அடியில் பெரிய அளவில் பள்ளம் தோன்றியுள்ளது. ஆனால் மேலே லேசான அளவிற்குதான் சாலை மூடப்பட்டிருக்கிறது.
சாலையின் இருபுறமும் ஏற்பட்டள்ள குழி
இந்தப் பள்ளத்தை அறியாமல் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை சற்று இறக்கினாலும்கூட திடீரென அந்த மண் உள்வாங்கி, மண்சரிவு ஏற்படுகிறது. இதனால் பெரும் அசம்பாவிதம் நேரிடும் அபாயம் ஏற்பட்டது. இதனையறிந்த அந்தப் பகுதி மக்கள் சாலையில் மண் உள்வாங்கியுள்ள பகுதியில், பள்ளத்தைச் சுற்றிலும் சிறிய அளவிலான கற்களை வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து, அசம்பாவிதங்களைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: யுஐடிஏஐ துறையின் பொது துணை இயக்குனராக கிருஷ்ணகிரி முன்னாள் ஆட்சியர் நியமனம்