நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்ற நீட் தேர்வை எழுதவிருந்த தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியைச் சேர்ந்த மாணவன் ஆதித்யா நேற்று (செப்.,12) நீட் அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடல் தற்போது தருமபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர் சடலத்தை பெற்றுக் கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவனின் தந்தை மணிவண்ணன் செய்தியாளரிடம் கூறுகையில், “நீட் தேர்வு ரத்து செய்யும் வரை மகனின் உடலை வாங்க மாட்டோம். கடந்த 10 நாள்களாக எனது மகன் மன அழுத்தத்தில் இருந்தார். நாள்தோறும் 15 மணி நேரம் தேர்வுக்காக படித்தார். அவருக்கு கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லை.
நண்பர்கள் வட்டமும் கூட பெரியது கிடையாது. நான்கு நண்பர்கள் தான் இருந்தார்கள். நாங்கள் இருவரும் தந்தை- மகன் போல அல்ல; நண்பர்கள் போல பழகினோம். என்னிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார். தேர்வுக்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகக் கூட தனக்கு பயங்கர டென்சனாக இருப்பதாகக் கூறினார். பயப்படாமல் தேர்வை அணுக அறிவுறித்தினேன்” என்றார்.
நீட் தேர்வு ஏற்படுத்திய மன அழுத்தம் காரணமாக தான் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக மணிவண்ணன் தெரிவிக்கிறார். நீட் தேர்வு காரணமாக மற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டபோது கூட தங்களுக்கு ஆதித்யா ஆறுதல் கூறியதாகவும் அவர் தெரிவிக்கிறார். இவ்வளவு தெளிவாக இருந்த தனது மகனுக்கே மன அழுத்தம், நெருக்கடிக் கொடுத்திருக்கிறது என்றால் பிற மாணவர்கள் நிலை எப்படியிருக்கும் எனக் கேள்வி எழுப்பும் மணிவண்ணன் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய மணிவண்ணன், “எனது மகன் நீட் தேர்வு பயிற்சிக்காக பெங்களூரு, ஈரோடு பகுதியில் பயிற்சி எடுத்து நன்றாக படித்தார். அங்கு நடத்திய ஆன்லைன் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் கூட மனம் தளர்ந்துவிட்டார். இந்த நிலை வேறு பெற்றோருக்கு வரக் கூடாது. ஒரு உயிருக்கு மதிப்பில்லையா? அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் உயிரிழந்த மாணவனின் தந்தை! தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்கள் அனுமதி இல்லாமல் உடற்கூறாய்வு மேற்கொண்டதாகவும் மணிவண்ணன் குற்றஞ்சாட்டினார். தனது மகன் உயிரிழந்த துக்கத்தில் தானும் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:”தற்கொலை தீர்வல்ல!” - நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் அபிலாஷா