தருமபுரி:பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டை, வடகரை, கோபிசெட்டிபாளையம், துறிஞ்சிஹள்ளி, அய்யப்பன் நகர், மங்காநேரி, தட்சானூர் மேடு என 6 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.
வடகரை கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இயற்கை சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கல்குவாரி செயல்பட்டு வருவதால் நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் தென்கரைக்கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, “வடகரை கிராமத்தில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் 10 அடி ஆழத்தில் கற்கள் எடுக்கப்பட்டுள்ளது. கல்குவாரியால் காற்று, தண்ணீர், ஒலி மாசு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படுகிறது. குவாரிகளுக்கு வந்து செல்லும் வாகனங்களால் சாலைகள் பாதிப்படைந்து வருகின்றன.
விவசாய நிலங்கள் மாசுபட்டு, விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிக ஆழத்திற்குக் கற்கள் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால் குடிநீர் பிரச்னை, விவசாய நிலத்திற்கு நீர் எடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.