தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும் சரக்கு லாரிகளை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் லாரி ஓட்டுநரை மிரட்டி 48 ஆயிரம் ரூபாய், செல்போன்களை அடையாளம் தெரியாத கும்பல் பறித்தாக காரிமங்கலம் காவல் துறையினருக்குப் புகார் வந்துள்ளது.
இந்தக் கும்பலைப் பிடிக்க தருமபுரி காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
வழிப்பறி செய்த ஆறு பேர் கைது இந்தக் கும்பலைப் பிடிக்க காவல் ஆய்வாளர் துரைராஜ் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி புறவழிச்சாலையில் கும்பாரஅள்ளி பிரிவு சாலை மாந்தோப்பு பகுதியில் பதுங்கியிருந்த ஆறு பேர் குடிபோதையில் கூச்சல் தகராறு செய்துள்ளனர்.
பின்னர் தகவலின்பேரில் தனிப்படை காவலர்கள் அப்பகுதிக்கு விரைந்துசென்று கும்பலைச் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், புறவழிச் சாலையில் நடந்த சரக்கு லாரி கடத்தல், வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடையது தெரியவந்தது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டியைச் சேர்ந்த தேவராஜ் (30), மாரிசெட்டிஹள்ளி பகுதியைச் சேர்ந்த தமிழன் (21), சூர்யா (25), சசிகுமார் (22), போச்சம்பள்ளி பாறையூரைச் சேர்ந்த விஜய் (20) சுண்டே குப்பம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (22) ஆகியோரை கைதுசெய்து அவர்களிடமிருந்த இரண்டு செல்போன்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், தங்கராஜ் ஆகியோரைத் தேடிவருகின்றனர். நெடுஞ்சாலையில் வழிப்பறி, லாரி கடத்தலில் தொடர்புடைய கும்பலை துரிதமாகப் பிடித்த தனிப்படை காவல் துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீலகிரியில் யானை வழித்தடங்களிலுள்ள கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும்