தருமபுரி:பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (45). விவசாயியான இவருக்கும், இவரது பக்கத்து ஊரான வெற்றிலை தோட்டத்தில் குடியிருக்கும் அக்கா மகன் சூரிய பிரகாஷ் (30), என்பவருக்கும் நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் பிரச்சினைக்குரிய விவசாய நிலத்தில், விவசாயம் செய்ய சூரிய பிரகாஷ் வந்ததாகவும், அப்போது அதனை பெருமாள் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் சூரிய பிரகாஷ் தனது அடியார்களுடன் வந்து, மூங்கில் மடுவு பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடையில் அமர்ந்திருந்த தனது தாய் மாமன் பெருமாளை சரமாரியாக வெட்டி உள்ளார்.
இந்த தாக்குதலில் பெருமாளின் கைத்துண்டானது. மேலும் கழுத்து, தலை, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால் கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல், கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் காரில் தப்பிச் சென்றது.
இதனை அடுத்து, படுகாயம் அடைந்த பெருமாளை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏரியூர் போலீசார், கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களின் வாகன பதிவு எண் உதவியுடன் தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட இரண்டு நபர்களை பாலக்கோடு பகுதியில் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவர் தப்பி ஓடி விட்டனர். கைது செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் ஆகாஷ், வெற்றிவேல் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் வழக்கில் முக்கிய நபரான சூரிய பிரகாஷ் மற்றும் தப்பி ஓடிய நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நிலத்தகராறில் தாய் மாமா மீது அக்கா மகனே கூலிப்படையை ஏவி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் ஏரியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: குடும்பத் தகராறால் விபரீதம் - குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை!