ஒரே கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் உடல்கள் தகனம் தருமபுரி: அரூர் டி.அம்மாபேட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் 25க்கும் மேற்பட்டோர், ஓசூர், கர்நாடக பகுதிகளில் உள்ள பட்டாசு குடோன்களில் வேலை செய்வதற்காக சென்றுள்ளனர். இதில் 15 இளைஞர்கள் ஒரு பகுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். மீதமுள்ள 10 இளைஞர்கள் தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (அக்.7) பட்டாசு குடோனுக்குத் தேவையான பட்டாசுகள் கண்டைனர் லாரி மூலம் வந்துள்ளது. இதனை இறக்கும் பணியில் குடோனில் வேலை செய்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ முழுவதுமாக பரவி குடோனில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறியது.
அப்பொழுது வெளியில் வேலை செய்திருந்த லோகேஷ் மற்றும் பீமாராவ் இருவரும் தப்பி வெளியில் வந்துள்ளனர். ஆனால் குடோனுக்குள்ளாக இருந்த மற்றவர்கள் விபத்தில் சிக்கினார். இந்த நிலையில் விபத்தில் இதுவரை 14 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். இதில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையைச் சேர்ந்த 7 இளைஞர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் உடற்கூராய்வுக்குப் பின்பு ஒப்படைக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து ஏழு பேரில் சடலங்கள் அவசர ஊரதி மூலமாக சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டைக்கு கொண்டு வரப்பட்டது. அப்பொழுது ஆம்புலன்ஸ் வாகனங்களை கண்டதும் உறவினர்கள் கதறி அழுது, அதனை சுற்றி வளைத்துக் கொண்டனர். மேலும் ஒரு சில இளைஞர்கள் வாகனங்களின் முன்பாக அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அனைவரையும் சமாதானப்படுத்தி வாகனங்களை தென்பெண்ணை ஆற்று கரையில் உள்ள மயானத்திற்கு அருகே கொண்டு சென்று ஏழு பேரின் உடல்களையும் இறக்கி, சடங்குகள் செய்யப்பட்டது. அப்பொழுது ஏழு பேரின் சடலங்களை கண்டு பெற்றோரும், உறவினரும் கதறி அழுத காட்சிகள் காண்போரை சோகத்தில் அழுத்தியது.
இதனை அடுத்து ஏழு பேரின் சடலங்களும் மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது. ஒரே கிராமத்தைச் சார்ந்த வேடப்பன், இளம்பரிதி, ஆதிக்கேசவன், விஜயராகவன், ஆகாஷ், கிரி, முனிவேல் உள்ளிட்ட 7 இளைஞர்கள் உயிரிழந்ததால், டி.அம்மாபேட்டை கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதையும் படிங்க:அட்ரஸ் கேட்பது போல் நடித்து செயின் பறிப்பு.. வைரலாகும் சிசிடிவி.. பெண்கள் ஜாக்கிரதை!