ஒவ்வொரு பருவத்திலும் தண்ணீர் தேவைக்காக நாம் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது- சீமான் தருமபுரி:ஒவ்வொரு பருவத்திலும் தண்ணீர் தேவைக்காக நாம் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது எனவும், 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிகளுக்கு இது குறித்து ஒரு சிந்தனையும் கிடையாது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாரியார் திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது, “தமிழ்நாட்டில் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. டாஸ்மாக் திறந்து வைத்துவிட்டு சட்டம், ஒழுங்கை பாதுகாப்பேன் என்று சொல்கிறார்கள். இந்த ஆட்சியில் டாஸ்மாக் ஒன்னுலதான் பாஸ் மார்க். ஒருபுறம் ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை கொடுப்பார்கள். அடுத்த முனையில் அதை அப்படியே டாஸ்மாக்கில் வாங்கிக் கொள்வார்கள். பண்டிகை நாட்களில் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை என செய்தி வரும்.
ஒருவன் கேட்கிறான், நஷ்டத்தில் ஓடுகிற ஆவினை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்கிறார்கள். ஏன் லாபத்தில் வருகிற டாஸ்மாக்கை டோர் டெலிவரி செய்வதில்லை என்று, கஞ்சா குட்கா போன்ற போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு பருவத்திலும் தண்ணீர் தேவைக்காக நாம் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிகளுக்கு இது குறித்து ஒரு சிந்தனையும் கிடையாது. இந்தியாவின் முதல் குடிமகனுக்கு கிடைக்கக் கூடிய மருத்துவம், கடைக்கோடி குடிமகனுக்கும் கிடைத்திட வேண்டும். எந்த விதமான பாகுபாடுமின்றி தரமான மருத்துவத்தை வழங்கிட வேண்டும், அதுதான் மக்களாட்சி.
மரங்கள் அனைத்தையும் வெட்டி விட்டு, தூய காற்று வழங்க வேண்டும் என 4,500 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. எங்களை சட்டமன்றத்திற்கு அனுப்பி பாருங்கள். ஒரு கேள்விக்கும் பதில் இருக்காது. முதலமைச்சர் உட்பட அனைவருமே சட்டமன்றத்தை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்வார்கள்.
கர்நாடகத்தில் தண்ணீர் தர மறுக்கிறார்கள். தமிழ் படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிப்பதில்லை. ஆனால் நாங்கள் எல்லா படத்தையும் திரையிட அனுமதிக்கிறோம். ஏனென்றால் தமிழர்கள் உயர்ந்தவர்கள். அதுதான் எங்களது மாண்பு. கொடை என்பது கேட்டு கொடுப்பதில்லை, கேட்காமலேயே கொடுப்பதுதான் ஆகச்சிறந்த கொடை” என பேசினார்.
இதையும் படிங்க:ஆவின் பால் கொள்முதல்; “தமிழ்நாட்டிற்கு வரப்போகும் ஆபத்து” - வானதி சீனிவாசன்