தருமபுரியில் பூவிதம் பள்ளி மற்றும் மக்கள் மன்றம் இணைந்து விதைத் திருவிழாவை நடத்தினர். இதில், பாரம்பரிய நெல், சிறுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், தின்பண்டங்கள், எண்ணெய் வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் சூழல் சார்ந்த புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தருமபுரியில் இயற்கை விதைத் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு - விதை
தருமபுரி: இயற்கை விதைத் திருவிழாவில் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து விதைகளை வாங்கிச் சென்றனர்.
இந்த விதைத் திருவிழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும், ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதால், அதன் உற்பத்தி பொருட்களை உண்பவர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட அனைத்து வகை விவசாய விதைகளும் இத்திருவிழாவில் இடம்பெற்றிருந்தது. இதில் திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த விவசாயிகள், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிறு தானியங்கள், தின்பண்டங்கள், கைவினை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.