ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவிகள் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மலையூர் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லை எனக் கூறி பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்து தர வேண்டும் என 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தியை சந்தித்து நேரில் மனு அளித்தனர்.
இதுகுறித்து பேசிய பள்ளி மாணவிகள், மலையூர் கிராமத்தில் தார் சாலை வசதி இருந்தும் அரசுப்பேருந்தின் போக்குவரத்து இல்லை என்றும்; 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பள்ளி செல்ல 10 கிலோ மீட்டர் நடந்து சென்று பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், காலையில் 5 மணிக்கு எழுந்து தயாராகி வந்தால் தான், பள்ளிக்கு சரியான நேரத்துக்குச் செல்ல முடிகிறது என்றும்; மாலை நேரத்தில் வீட்டிற்குச் செல்வதற்கு இரவு ஆவதாகவும் இடையில் வன விலங்குகளின் அச்சுறுத்தல் இருப்பதாகவும்; தங்கள் பகுதிக்கு அரசுப்பேருந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் நேரில் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர், “தங்கள் பகுதிக்கு பேருந்து போக்குவரத்து வேண்டுமென்று பலமுறை அரசியல்வாதிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி மாணவிகள் ஆட்சியரிடம் முறையிடலாம் என அழைத்ததால் அவர்களுடன் வந்தேன். முதல்முறையாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேருந்து போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் கனிவுடன் கேட்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்” என்றார்.
இதையும் படிங்க:நீலகிரியில் நள்ளிரவில் பள்ளிவாசலை சூறையாடிய காட்டு யானைகள்