தருமபுரி: காலநிலை மாறுபாடு, பருவ நிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்தல், ஒரு சில இடங்களில் அதிக மழைப்பொழிவு, அதிக பனிப்பொழிவு உள்ளிட்டவை, காலநிலை மாறுபாடு காரணமாக நிகழ்கிறது.
இதற்கு காடுகள் அழிப்பு மற்றும் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளே முக்கிய காரணம். எனவே, 33 சதவீத காடுகளை உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காடுகளில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, வனத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தருமபுரி பச்சமுத்து கல்வி குழுமங்கள் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 3.5 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்வி குழுமங்களின் தாளாளர் பாஸ்கர், மரம் வளர்ப்பதன் அவசியத்தை பள்ளி மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளைக் கொண்டு விதைப்பந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டார்.
பின்னர் அதை செயல்படுத்தும் விதமாக இன்று (நவ. 9) மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் விதைப்பந்து திருவிழாவாக ஏற்பாடு செய்திருந்தார். அந்த வகையில், மாணவர்கள் பங்கு பெரும் இந்த விதைப்பந்து தயாரிப்பு திருவிழாவினை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்.