தமிழ்நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கும் நாள் குறித்தும், பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அந்தந்த பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பாக விரிவான அறிவிப்பு அனுப்பப்பட்டது.
பள்ளி திறந்து முதல்நாளே இப்படியா? - தமிழ்நாடு அரசு, தனியார் பள்ளி
தருமபுரி: தமிழ்நாட்டில் அரசு, தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர்களே மாணவர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்திய அவலம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி ஊராட்சி பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்றுவருகின்றனர். இன்று காலை முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களை வகுப்பறைகளை தூய்மை செய்யும்படி, பள்ளித் தலைமை ஆசிரியர் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியரே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காற்றில் பறக்கவிட்டு ஏழை மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலை வாங்குவது நியாயமா என பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் இதே நிலைதான் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.