தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பகுதியில் அமைந்துள்ளது சின்னாறு. பஞ்சப்பள்ளியிலிருந்து நம்மாண்ட அள்ளி, அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, கெண்டேஅள்ளி வழியாக சின்னாறு செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையர்கள், ஏரியா வாரியாக பிரித்து மணலை கர்நாடக மாநிலத்திற்கும் பல வெளி மாநிலங்கள், வெளி மாவட்ட பகுதிகளுக்கும் மணலை விற்பணை செய்து வருகின்றனர்.
தொடரும் மணல் கொள்ளை: வெளி மாநிலங்களுக்கு விற்பனை! - தருமபுரி
தருமபுரி: சின்னாறு ஆற்றுப்படுகையிலிருந்து மணல் கொள்ளையர்கள் வெளி மாநிலங்களுக்கு மணல்களை விற்பனை செய்து வருவதைத் தடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரமாக திகழும் இந்த ஆற்றுப்படுகையிலிருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் இந்த ஆற்றுப்படுகை உரு தெரியாமல் காட்சியளிக்கிறது. ஏரியா வாரியாக பிரித்து மணல் கொள்ளையடிக்கப்படுவதால் ஆங்காங்கே கிணறுகள் போன்றும், குழிகளாகவும் காணப்படுகின்றன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும் சட்டத்திற்குப் புறம்பாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.